Saturday, April 9, 2016

உங்கள் குழந்தைகள் வம்புத்தொல்லைக்கு உள்ளாகிறார்களா?



வம்புத்தொல்லை என்பது பல வகுப்புகளில், பல குழந்தைகளுக்கு நிகழும் நிகழ்வாக இருக்கிறது. வம்புத்தொல்லை என்பது அடிப்பது, திட்டுவது, தள்ளி விடுவது, மனக்கஷ்டம் கொள்ளச்செய்வது, பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவது, கேலி செய்வது, பயமுறுத்துவது, பிடிக்காததைச் செய்யக் கட்டாயப்படுத்துவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த வம்புத்தொல்லை நிறைய குழந்தைகளை மிக அதிக அளவில் பாதிக்கிறது. மேலும் பெரும்பான்மையான குழந்தைகள் அவ்வபோது இவ்வாறான வம்புத்தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல குழந்தைகளால் இந்த வம்புத் தொல்லைகளை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய கவலையிலேயே படிக்காமல், பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.

அது போக அதிகம் பேர் படிக்கும் வகுப்புகளில், ஆசிரியர்களால் குழந்தைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போகிறது. ஆசிரியர்களிடம் போய்க் குழந்தைகள் சொல்லலாம் என்றால் பல ஆசிரியர்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம் ஏற்பட்டு, நேரமின்மை காரணமாக எல்லோரும், என்ன நடந்தது என்று பொறுமையாய் விசாரிக்க முடியாமல் எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு வம்புத்தொல்லைகள் தொடர மவுனச் சாட்சிகளாக இருந்து போகிறார்கள்.   

இதனால் ஆசிரியரிடம் சொல்வதால் ஒன்றும் பயனில்லை என்று நினைத்துக்கொண்டு குழந்தைகள் தங்களுக்குள்ளேயே அந்த சோகத்தை வைத்துப் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் பள்ளிக்குச் செல்வது ஒரு சுகமான அனுபவமாய் இல்லாது, இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்து நினைத்து பள்ளி என்பது பயமுறுத்தும் இடமாக மாறிப்போகிறது.

ஏன் சில குழந்தைகள் மற்றவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்று பார்த்தால், அவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும், தன் அதிகாரத்தை மற்றவர்கள் மீது காண்பிக்கவும் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். பெரும்பாலும் வம்புத்தொல்லைக்கு மற்றவர்களை ஆளாக்கும் குழந்தைகளின் குடும்பத்தில் அவ்வபோது சண்டைகளும், கோபதாபங்களும் நடப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தங்கள் மீது குடும்பத்தினரால் செலுத்தப்படும் அதிகாரத்தை வேறு யார் மீதாவது காட்டவும், தன் குடும்பத்தினரால் கொடுக்கப்படாத முக்கியத்துவத்தைப் பெறவுமே குழந்தைகள் அவ்வாறு நடந்து கொள்கின்றன.

வம்பு தொல்லைக்கு ஆளாக்கும் குழந்தைகள் முன்பு வேறு யாராவதால் வம்பு தொல்லைக்கு ஆளாக்கவும் பட்டிருக்கலாம். அதே போல் ஒரு குறிப்பிட்ட குழந்தை வம்புத்தொல்லைக்கு மற்றவர்களை ஆளாக்குகிறது என்றால், அந்தக் குழந்தை வம்புத்தொல்லைக்கு என்றுமே ஆளாகாது என்று கிடையாது.

வம்புத்தொல்லைக்கு எந்தக் குழந்தைகள் ஆளாகின்றன என்று பார்த்தால், யார் மற்ற யாருடனும் அதிகமாகப் பழகாமல் ஒதுங்கி இருக்கிறார்களோ, யாரை வம்புத்தொல்லைக்கு ஆளாக்கினால், எதிர்க்கத் தைரியம் இல்லாமல் இருப்பார்களோ, யாரைச் சீண்டினால் மனக்கஷ்டம் கொள்வார்களோ, யார் குறைந்த தன்மதிப்பீடு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்கள்தான் எளிதில் வம்புத்தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

வம்புத்தொல்லை பிரச்சனையைச் சமாளிப்பது எப்படி?
உங்கள் குழந்தை வம்புத்தொல்லைக்கு ஆளாக்கும் குழந்தையாய் இருந்தால், உங்கள் குடும்பச் சூழ்நிலையைச் சற்று உற்றுநோக்கிப்பாருங்கள்.

குடும்பத்தில் அவ்வபோது கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் நடந்தால், குழந்தைகள் அதனைப் பார்த்து வளரும் போது, அவர்களை அறியாமல் வாழ்க்கை என்பது சண்டை சச்சரவுகளுடன் இருந்தால்தான் அது சுவாரஸ்யம் என்ற ஒரு நம்பிக்கை உருவாகி விட வாய்ப்பு உண்டு. ஆகவே குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைக் களையத் தகுந்த நடவடிக்கைகளைக் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும். வேண்டுமானால், உளவியல் ஆலோசகரின் உதவியைப் பெற்றுக் குடும்பச் சூழலை மேம்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் இருப்பதே பாதி பிரச்சனைகளைக் களைந்து விடும். மேலும் மற்றவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குவதால்நல்லது நினைக்கும் நண்பர் வட்டம் அந்தக் குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து போவதைச் சொல்லிப் புரியவையுங்கள்.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் வம்புத்தொல்லைகள் செய்து, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதை விட நல்ல முறையில் மற்றவர்களுக்கு உதவி செய்தும், போட்டிகளில் கலந்து கொண்டும், பொறுப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சரியாக நிறைவேற்றுவதன் மூலமும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும், தவறான முறையில் பெறப்படும் கவனம் தற்காலிகமானது, எதிர்மறையானது என்றும் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள்.
எல்லோரும் சமமானவர்கள், யாரும் யாருக்கும் குறைவானவர்களும் அல்லர், மேலானவர்களும் அல்லர் என்ற மதிப்பீட்டையும், மற்றவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளவும், மற்றவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கவனிக்கவும் பயிற்சி கொடுங்கள்.

முடிந்தவரை மற்றவர்களைக் கஷ்டப்படுத்தாமலும், அதே நேரத்தில் தங்களைக் கஷ்டப்படுத்தாமலும் தங்களின் கருத்துகளை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தவும், அவ்வாறே நடந்துகொள்ளவும் கற்றுக்கொடுங்கள்.
உங்கள் குழந்தை வம்புத்தொல்லைக்கு ஆளாகும் குழந்தையாய் இருந்தால், பின்வரும் விஷயங்களைச் செய்யுங்கள்.

மற்றவர்கள் உங்கள் குழந்தையை வம்புத்தொல்லை செய்கிறார்கள் என்றால், அது உங்கள் குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்பதை உறுதியான குரலில் தைரியமாக அந்த நபரிடம் சென்று சொல்ல உங்கள் குழந்தையைத் தயார்படுத்துங்கள். அப்படியும் அந்தக் குறிப்பிட்ட நபர் கேட்கவில்லை என்றால், அந்த நபரை முழுவதுமாகத் தவிர்த்து விடச் சொல்லுங்கள், அவர்கள் வம்புத்தொல்லை செய்வதை எந்தக் காரணம் கொண்டும் கண்டுகொள்ளக்கூடாது என்றும், கண்டுகொண்டால் அவர்கள் மேலும் மேலும் கேலி செய்ய வாய்ப்பு அதிகம் என்றும் கூறுங்கள். இப்படியெல்லாம் செய்தும் அந்த நபர் தொடர்ந்து வம்புத்தொல்லை செய்து கொண்டே இருந்தால், நம்பிக்கையான ஆசிரியரிடமோ, பள்ளியின் முதல்வர்/தலைமை ஆசிரியரிடமும் சொல்லச் சொல்லுங்கள். மிக முக்கியமாக வம்புத்தொல்லைக்கு ஆளாகும் நாட்களில் உங்கள் குழந்தைகள் அது பற்றி உங்களிடம் வந்து தைரியமாகச் சொல்ல 
அவர்களுக்குச் சுதந்திரம் தாருங்கள்.

முடிந்தவரைக் குழந்தைகளையே இந்தப் பிரச்சனையைக் கையாளவும், பேசித்தீர்த்துக் கொள்ளவும் பயிற்சி கொடுங்கள். முடியாமல் போகும் பட்சத்தில், நீங்கள் அதில் தலையிட்டுத் தீர்வு காண முயலலாம்.

உங்கள் குழந்தைகளின் நல்ல விஷயங்களைப் பாராட்டுங்கள். அவர்களின் குறைகளைக் களைய அல்லது ஏற்றுக்கொள்ள உங்களை முதலில் தயார் செய்து கொண்டு, உங்கள் குழந்தைகளையும் தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளவும், தன் குறைகளை ஏற்றுக்கொள்ளவும் பயிற்சி கொடுங்கள். மற்றவர்கள் அவர்களை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதனால் அவர்கள் மற்றவரை விடக் குறைவானவன்/ள் என்று நினைப்பு எழாமல் இருக்கவும், அதனால் அவர்களின் தன்மதிப்பீடுக்கு எந்த ஒரு குறைவும் வராமலும் பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் குழந்தையை வம்புத்தொல்லைகள் செய்பவர்களை எதிர்த்து நிற்க, நல்ல நண்பர்களை அவர்களுடன் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். தேவையான போது அவர்களின் நண்பர்களுக்கு உதவி செய்யச் சொல்லுங்கள், அப்போதுதான், உங்கள் குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை எனில் அவர்கள் உதவி செய்வார்கள்.

மற்றவர்கள் உங்கள் குழந்தைகளை வம்புத்தொல்லைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதற்காக, மீண்டும் அவர்களைக் கேலி செய்வது, அடிப்பது, கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, பட்டப்பெயர் வைத்து அழைப்பது போன்றவற்றைச் செய்யவே செய்யக்கூடாது என்று ஆலோசனை சொல்லுங்கள்.

மேலும் பள்ளிகளில் வம்புத்தொல்லைகள் இல்லாமல் இருக்க, உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டிருக்கிறாரா, ஆசிரியர்களுக்கு இது பற்றிய சரியான புரிதல் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில் உரிய நடவடிக்கைகள் எடுக்கச்சொல்லி பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் மூலம், பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வையுங்கள்.

இவற்றையெல்லாம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது இவற்றை எல்லாம் செய்தும் மீறிப் பிரச்சனைகள் தீராமல் போனாலோ, தயங்காமல், ஓர் உளவியல் ஆலோசகரை அணுகி உதவி பெற்றுக்கொண்டு உங்கள் குழந்தைகளின் வாழ்வை வளமாக்குங்கள். வாழ்க வளமுடன்!


2 comments:

  1. மிகச் சரியான ஆலோசனையோடு கட்டுரையை நிறைவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
    "உங்கள் குழந்தைகளின் வாழ்வை வளமாக்குங்கள்." ஆம் மிகச் சரியான நினவூட்டல்.
    வம்புத் தொல்லையை சரிசெய்வது மட்டும் நோக்கமாக்காமல் குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக அமைய சரி செய்தலின் அல்லது சீர் செய்தலின் வழிமுறை வழிவகுக்க வேண்டும்.
    அருமையான சிந்தனைப் பகிர்வு

    ReplyDelete