Friday, February 8, 2013

கேன்சர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்



1. கேன்சர் என்றால் என்ன?
  நமது உடல் செல்களால் ஆனது. செல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் உள்ளது. அவை இறக்கும் தருவாயில், இரண்டாகவோ, மூன்றாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட செல்களாக தன்னைத்தானே பிரித்து புதிய செல்களை உருவாக்கும். எத்தனை செல்களாக பிரிய வேண்டும் என்ற விபரம் செல்லில் உள்ள டி.என்.ஏ-வில் பதியப்பட்டிருக்கும்.  டி.என்.ஏ-ல் ஏதோ ஒரு காரணத்தால் கோளாறு ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக செல்கள் பிரிந்து தேவையில்லாத செல்கள் உருவாகி விடுகின்றன. அந்த தேவையில்லாத செல்களின் தொகுப்பு ‘கட்டி’ என பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்த கட்டிகள் இரு வகைப்படும். 1. பெனைன் கட்டி 2. புற்றுநோய் கட்டி

பெனைன் கட்டி எந்த ஒரு தீங்கும் செய்யாது, அருகில் உள்ள மற்ற செல்களை பாதிக்காது அப்படியே இருந்து விடும். புற்றுநோய் கட்டி அருகில் உள்ள செல்களை பாதித்து அவற்றின் டி.என்.ஏ-வையும் செயலிழக்க செய்து அவற்றையும் புற்றுநோய் செல்களாக மாற்றி விடும். அவ்வாறு இருக்கும் புற்றுநோய் கட்டிகள் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும் போது,  நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவரிடம் செல்கிறோம். ஆகவே கேன்சர் என்பது நம் உடலில்  நிகழும் சில திடீர் மாற்றங்களால் ஏற்படும் நோய் ஆகும்

2. எந்த கிருமியால் ஏற்படுகிறது? கேன்சர் ஒரு தொற்றுநோயா?
கேன்சர் என்பது பொதுவாக கிருமியால் ஏற்படும் நோய் அல்ல. ஆகவே இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தொற்றுநோய் அல்ல. கேன்சர் நோயாளிகளை நாம் தொடலாம், அவர்கள் சாப்பிட்ட தட்டில் நாமும் சாப்பிடலாம், அவர்கள் பயன்படுத்திய கழிவறையை நாமும் பயன்படுத்தலாம். ஆகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவரை ஒதுக்கிவைக்க்க் கூடாது.

3. கேன்சர் உடலின் எந்த பாகங்களில் எல்லாம் ஏற்படும்?
செல்கள் உடலின் எல்லா பாகங்களிலும் இருக்கின்றன. ஆகவே உடலின் எந்த பாகத்திலும் கேன்சர் ஏற்படலாம். உடலில் முடி மற்றும் நகத்தில் மட்டும் கேன்சர் ஏற்படாது, ஏனெனில் அங்கு இறந்த செல்களே இருக்கின்றன. அதிகமாக உடலின் சில பாகங்களில் கேன்சர் ஏற்படுகிறது. அவற்றின் பெயராலேயே கேன்சரும் அழைக்கப்படுகிறது

  • கல்லீரல்
  • இரைப்பை
  • மார்பு
  • கருப்பை
  • கருப்பை வாய்
  • பாலுறுப்பு
  • சிறுநீரகம்
  • இரத்தம்
  • எலும்பு
  • மூளை            
  • வாய்
  • தொண்டை        
  • நுரையீரல்

4. கேன்சரின் அறிகுறிகள் என்னென்ன?
கேன்சருக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் கிடையாது. கேன்சர் ஏற்படும் உடல் பாகங்கள் பொருத்து அறிகுறிகள் வேறுபடும். கேன்சர் ஏற்படும் உடல்பாகங்களில் கோளாறு ஏற்பட்டு, அவை வழக்கம் போல செயல்படாமல் போகும். அவ்வாறு செயல்படாமல் போகும் போது, மருத்துவரும் மற்றவர்களும் அந்த உடல் பாகத்தில் பொதுவாக ஏற்படும் நோய் எனக்கருதி அதற்கான பரிசோதனைகளையும், மருந்துகளையும் அளிப்பார்கள். அந்த பரிசோதனைகள் சிலவற்றில், மருத்துவர் நினைத்த நோய்கள் இருப்பதாக முடிவுகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் பல நேரங்களில் கேன்சர் வேறு சில நோய்களின் அறிகுறிகளையே காட்டும். எடுத்துக்காட்டாக நுரையீரல் புற்றுநோய், காசநோயின் அறிகுறிகளையே ஆரம்பத்தில் காட்டும்.

கொடுக்கப்பட்ட மருந்துகள் செயல்படாமல் போனவுடனேதான்,  மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகம் வரும் வேளையில், கேன்சர் செல்கள் மற்ற உடல் பாகங்களுக்கு பரவி இருக்கலாம். இதனால்தான்,  கேன்சர் ஏற்பட்டு இருப்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. ஆகவே இந்த தாமத்திற்கு காரணம் கேன்சரின் தன்மையே தவிர மருத்துவர்களோ அல்லது மற்றவர்களோ கிடையாது!

5. எந்த வகையில் கேன்சர் இருப்பதை அறியலாம்?
கேன்சர் இருப்பதை வெறும் கண்களால் பார்த்து அறிய முடியாது. 1. பயாப்ஸி சோதனை - கட்டியின் ஒரு பகுதியை எடுத்து, அதன் செல்களை, நுண்ணோக்கி/மைக்ரோஸ்கோப்பில் வைத்து சாதாரண செல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது 2. ஸ்கேன்/மேமொகிராம்/ஸ்கோப்பி - கட்டி உள்ள இடத்தை காட்சி படமெடுத்து, அதனை ஆராய்வது.

6. கேன்சர் ஏற்பட காரணங்கள் என்னென்ன?
செல்களில் உள்ள டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பே கேன்சர் ஏற்பட காரணமாகும். அந்த பாதிப்பை ஏற்படுத்துபவை எவை எவை என ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் . ஒரு மிக முக்கிய கேன்சரை உருவாக்கும் பொருளாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது புகையிலை! கிட்டத்தட்ட 45% புற்றுநோய்கள் புகையிலையால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், “புகையிலை கேன்சரை உருவாக்கும்” என்ற எச்சரிக்கை வாசகம் இப்போது பரவலாக்கப்பட்டிருக்கிறது

மேலும் புகையிலை என்பது கேன்சர் ஏற்படுவதற்கு இருக்கும் பல காரணங்களில் ஒன்று மட்டுமே. சில வகை கிருமிகள், டின்.என்.ஏ வில் பாதிப்பு ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாய் இருக்கிறன.
  • ஹுமன் பாப்பிலோமா வைரஸ் - கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது
  • எச்-பிலின் வைரஸ் - இரைப்பை புற்றுநோய்  ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது.
கேன்சர் என்பது ஒரு பரம்பரை நோயல்ல. சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே பரம்பரையாக ஏற்படுகின்றன. ஆகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் இது பற்றி பயப்பட வேண்டாம். வேண்டுமானால் அவ்வபோது உரிய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.

7. கேன்சர் என்றால் இறப்பு தானா?
கேன்சர் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், 90%-க்கு மேல் குணப்படுத்த முடியும். கேன்சருக்கு இப்போது பலவிதமான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் வந்து விட்டன. ஆகவே கேன்சர் என்றால் இறப்பு என்று அர்த்தம் கிடையாது.

8. என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? அவற்றிற்கு பக்க விளைவுகள் உண்டா?
பொதுவாக மூன்று விதமான சிகிச்சை முறைகள் உள்ளன.
1. அறுவை சிகிச்சை: புற்றுநோய் செல்களை அறுவை சிகிச்சை செய்து  நீக்கி விடுவது
2. கதிரியியக்க சிகிச்சை: புற்றுநோய் செல்களை கதிரியக்கம் மூலம் அழிப்பது
3. கீமோதெரபி: வாயின் மூலமாகவோ அல்லது ஊசிகள் மூலமாக மருந்து செலுத்தி புற்றுநோய் செல்களை அழிப்பது
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயது, உடல் நலம், நோய் ஏற்பட்டு இருக்கும் இடம், நோயின் தீவிரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சிகிச்சை முடிவு செய்யப்படும். ஆகவே ஒரே மாதிரியான சிகிச்சை எல்லோருக்கும் கொடுக்கப்பட மாட்டாது. சில சிகிச்சைகளுக்கு சில பக்கவிளைவுகள் உண்டு. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தற்காலிகமானதே! எல்லோருக்கும் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் வர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சிலருக்கு ஏற்படலாம், சிலருக்கு ஏற்படாமலும் போகலாம்

9. இந்தியாவில் உள்ள சிகிச்சைகள் கேன்சரை குணப்படுத்துமா?
இந்தியாவில் உள்ள சிகிச்சை முறைகள் உலகத்தரமானவை. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து பலரும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஆகவே வெளி நாட்டுக்கு சென்றால் தான் குணப்படுத்த முடியும் என்று இல்லை.

10. ஆங்கில மருத்துவ முறையை தவிர மற்ற மருத்துவ முறைகள் குணமளிக்குமா?
இது வரை ஆங்கில மருத்துவ முறையை தவிர, எந்த மருத்துவ முறையிலும், கேன்சரை குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அப்படிப்பட்ட மருந்துகள் எடுத்துக்கொண்டு, உடலை பரிசோதனை சாலையாக்க வேண்டாம்

11. எப்படி கேன்சரிலிருந்து பாதுகாத்துக் கொள்வது?
புகையிலை, மது போன்ற போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். சத்தான சரிவிகித உணவு உண்ணுங்கள். அமைதியான வாழ்க்கை முறையை கடைபிடியுங்கள். கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள். 6-8 மணி நேரம் தூங்கி, உடலுக்கு நல்ல ஒய்வு கொடுங்கள்.  குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடலுக்கு நோய் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

12. கேன்சரிலிருந்து குணமான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்?
கேன்சரிலிருந்து குணமான பிறகு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். பொதுவாக எல்லா வேலைகளையும் செய்யலாம். தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவரை சந்திக்க வேண்டும். மருத்துவரில் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் நல்வாழ்வு நிச்சயம்.
உங்களுக்கு கேன்சரைப்பற்றி மேலும் ஏதேனும் கேள்விகள்/சந்தேகம் இருந்தால் ஆன்காலஜிஸ்ட்(Oncologist) எனப்படும் புற்றுநோய் மருத்துவர்களை மட்டுமே சந்தித்து தெளிவு பெற்றுக்கொள்ளவும்.
-கார்த்திக் லெக்ஷ்மணன், புற்றுநோய் உளவியலாளர்

No comments:

Post a Comment