Tuesday, January 15, 2013

திருமதி. சொஹைலாவின் 1983 ஆம் ஆண்டு கட்டுரை

பலரும் என்னை ஓர் உளவியலாளனாக தற்போது நிகழ்ந்திருக்கும் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர், அவற்றைப்பற்றி தமிழில் என்னை கட்டுரைகளும் எழுதச்சொன்னனர். கற்பழிப்பு என்பது கால மாற்றத்தில் துரதிஷ்டவசமாக ஏற்படும் நிகழ்வு என்பதைத் தவிர, எனக்கு வேறு ஒன்றும் அப்போது சொல்ல தோன்றவில்லை.

ஆனால் திருமதி. சொஹைலா அவர்கள் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி ஓர் அற்புதமான கட்டுரையை 1983 ஆம் ஆண்டு, மனுஷி என்ற புது தில்லியிலிருந்து வெளியாகும் பெண்ணிய இதழில் எழுதியிருக்கிறார். மேலும் 9 ஜனவரி 2013-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் மேலும் பல கருத்துக்களை மற்றோரு கட்டுரையின் மூலம் தெரிவித்திருக்கிறார். எனது தற்போதைய கடமை அவற்றை மொழிபெயர்த்து கொடுப்பதே! தங்களின் கடமை, .....

இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்த பிறகு, ‘கற்பழிப்பு’ என்ற தமிழ் சொல்லை வழக்கொழித்து, ‘வன்புணர்ச்சி’ என்ற சொல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. ஆகவே இந்த கட்டுரை முழுவதும் அவ்வாறே மொழி பெயர்த்திருக்கிறேன்.

1983 ஆம் ஆண்டு, மனுஷி என்ற புது தில்லியிலிருந்து வெளியாகும் பெண்ணிய இதழில் திருமதி. சொஹைலா அவர்கள் எழுதிய கட்டுரை:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 17 வயதாக இருக்கும் போது, ஒரு கும்பலால் நான் வன்புணர்ச்சிக்கு ஆளானேன். என்னுடைய பெயரும், என் புகைப்படமும் இதோ இந்த கட்டுரையிலேயே உள்ளது. 


நான் பம்பாயில் வளர்ந்தவள், தற்போது அமெரிக்காவில் படித்து வருகிறேன். வன்புணர்ச்சி பற்றி நான் இப்போது ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதி வருகிறேன், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தேன். நான் வன்புணர்ச்சிக்கு ஆளான பிறகு இந்த மூன்று வருட காலமாக, வன்புணர்ச்சி பற்றியும், வன்புணர்ச்சி கொள்பவர்கள் பற்றியும், வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள் பற்றியும் சமுதாயத்தில் இருக்கும் தவறான கருத்துக்கள் பலவற்றையும் கேள்விப்பட்டு வருகிறேன். வன்புணர்ச்சிக்கு ஆளானவர்கள் மீது சுமத்தப்படும் களங்கம் பற்றியும் எனக்கு தெரியவந்திருக்கிறது. விலைமதிப்பற்ற “கற்பை” இழப்பதை விட உயிரை விட்டிருக்கலாம் என்று பலரும் மீண்டும் மீண்டும் பேசிவருகிறார்கள். இதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் என்னை பொருத்தவரை, என் உயிர் கற்பை விட மிக அதிக மதிப்பு வாய்ந்தது.

நிறைய பெண்கள் இந்த களங்கத்திற்கு பயந்து அமைதியாக இருந்து விடுகிறார்கள், ஆனால் அவர்களது அமைதியின் விளைவாக ஏற்படும் பெருங்கோபத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு கண்ணீர் விடுகிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஆண்களோ வன்புணர்ச்சிக்கு ஆளானவரை பல காரணங்களை சொல்லி குற்றம் சுமத்துகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சியூட்டுவதென்றால் பெண்களும் கூட வன்புணர்ச்சிக்கு ஆளானவர் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு காரணம் பெண்களீன் ஆழ்மனதில் பதிந்து போன ஆணாதிக்க மதிப்பீடுகளாகவும் இருக்கலாம் அல்லது தாங்கள் இப்படிப்பட்ட கொடூரமான நிகழ்வுகளுக்கு ஆளாக போவதில்லை என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

அந்த நிகழ்வு ஒரு ஜூலை மாத மாலையில் நடந்தேறியது. அந்த ஆண்டில்தான், பெண்கள் சங்கத்தினர் வன்புணர்ச்சிக்கான தண்டனைச் சட்டங்களை மேம்படுத்த சொல்லி கோரிக்கை வைக்க தொடங்கியிருந்தனர். அன்று நான் என் நண்பன் ரஷீத்-உடன் இருந்தேன். நாங்கள் கொஞ்சம் நடந்து சென்று, பம்பாயின் புறநகர் பகுதியான ச்சம்பர்-இல் இருக்கும் என் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கும் மலை பகுதியில் உட்கார்ந்திருந்தோம். கையில் கதிர் அரிவாளுடன் இருந்த நான்கு ஆண்கள் எங்களை தாக்கினர். எங்களை அடித்து, எங்களை மலைக்கு மேல் செல்ல கட்டாயப்படுத்தினர். எங்களை இரண்டு மணி நேரம் அங்கு வைத்திருந்தனர். நாங்கள் உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தப்பட்டோம். இருள் சூழும் வேளையில் நாங்கள் இருவரும் பிரிக்கப்பட்டோம், கத்தினோம். ரஷீதை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு என்னைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்கள், எங்களில் ஒருவர் எதிர்த்திருந்தால், மற்றொருவர் காயப்படுத்தப்பட்டிருப்பார். இவ்வாறு அவர்கள் செய்தது ஒரு சிறந்த தந்திரம் என்றே நான் சொல்வேன்.

எங்களை கொல்லலாமா வேண்டாமா என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. எங்களால் முடிந்த எல்லாவற்றையும் நாங்கள் உயிரோடு இருக்க செய்து பார்த்தோம். என்னுடைய அப்போதைய குறிக்கோள் உயிருடன் இருப்பதே, அதுவே எனக்கு மற்ற எதை விடவும் முக்கியமாக தெரிந்தது. முதலில் அவர்களை அடித்து போராடிப்பார்த்தேன் பிறகு என் வார்த்தைகளால் திட்டி போராடி பார்த்தேன். என் கோபமும் கத்தலும் எந்த ஒரு பலனும் தரவில்லை, அதனால் அன்பை பற்றியும், இரக்கத்தை பற்றியும் பைத்தியக்காரத்தனமாக உளறத் தொடங்கினேன். மனிதத்தன்மை பற்றியும், நான் ஒரு மனுஷி என்ற உண்மையை பற்றியும் பேசினேன். அவர்களும் அடிப்படையில் மனிதன் தானே என்ற நம்பிக்கையில்! அதற்கு பிறகு அவர்கள் மென்மையாக நடந்து கொண்டார்கள். எல்லோரும் இல்லையென்றாலும், அந்த தருணத்தில் என்னிடம் வன்புணர்ச்சி கொள்ளாதவர்களாவது என்னிடம் மென்மையாக நடந்து கொண்டார்கள். என்னையும், ரஷீதையும் கொல்லாமல் விட்டுவிட்டால், என்னிடம் வன்புணர்ச்சி கொண்ட அந்த நபரை சந்திக்க நான் அடுத்த நாள் வருவதாக அவர்களில் ஒருவரிடம் சொன்னேன். அப்படியொரு விஷயத்தை என்னால் செய்யவே முடியாது, இருந்தாலும் நாங்கள் உயிர் பிழைக்க வேண்டி நான் அவ்வாறு சொன்னேன். அப்படியே அந்த இடத்திற்கு நான் மீண்டும் சென்று அவனை சந்தித்திருந்தால், அவன் மீண்டும் என்னை கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சி செய்யாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள மிக மிகக் கூர்மையான ஆயுதத்தை என்னோடு கொண்டு சென்றிருப்பேன்.

பல ஆண்டு சித்ரவதை போல் இருந்த அந்த நிகழ்வு முடிந்த பிறகு, (அவர்கள் என்னிடம் 10 முறை வன்புணர்ச்சி கொண்டனர் என்று நினைக்கிறேன், நான் மிகுந்த வலியுடன் இருந்ததால் கொஞ்ச நேரத்திற்கு பிறகு என்ன நடந்தது என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை) கடைசியாக ஒரு பையனுடன் தனியாக வந்திருந்த நான் எந்த அளவுக்கு கெட்ட பெண் என்று ஒரு நீண்ட நெடிய விரிவுரை கொடுத்துவிட்டு எங்களை போகட்டும் என விட்டுவிட்டார்கள். அவர்கள் என்னை அப்படி மிகத்ததவறாக நினைத்ததே அவர்களை அதிகம் வெறியூட்டியது என்று கருதுகிறேன். எனக்கு ஏதோ பாடம் புகட்டி, நன்மை செய்வது போல் அவர்கள் நடந்து கொண்டார்கள். அவர்களின் செயல்களுக்கு அவர்கள் கற்பித்த நியாயம், அவர்களது அதிகபட்ச அடிப்படைவாத-கொள்கை வெறியின் வெளிப்பாடாக இருந்தது.

அவர்கள் எங்களை மலையிலிருந்து கீழே கொண்டு வந்தார்கள். நாங்கள் இருவரும் இருட்டான சாலையில் தடுமாறினோம், ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தோம். அவர்கள் எங்களை கொஞ்ச நேரத்திற்கு, அரிவாளை காட்டியவாறு பின்தொடர்ந்தார்கள். இதில் மிக மிக கெட்ட விஷயமாக இருந்தது என்னவென்றால், அந்த தருணத்தில் தப்பித்து செல்வது என்பது என்பது எங்களுக்கு வெகு அருகில் இருந்தது என்றாலும் சாவு எங்களை விடமால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. உடைபட்டு, காயப்பட்டு, சிதைக்கப்பட்டு ஒரு வழியாக நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம், அந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட உணர்வு எளிதில் என்னை விட்டு அகலாத ஒரு விசித்திரமான உணர்வு. எங்கள் உயிருக்காக கெஞ்சுவதை நிறுத்திக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து பேசினோம் ஏனெனில் அவர்களிடம் கோபம் கொள்வது எங்கள் வயிற்றில் அரிவாளை பாய்ச்சும் என்று எங்களுக்கு தெரிந்திருந்தது. (நாங்கள் வீட்டுக்கு வந்தவுடன்) எங்கள் எலும்புகளிலும், கண்களிலும் ஆறுதல் வெள்ளமாய் புகுந்தோடியது. நாங்கள் மிகுந்த உணர்ச்சியோடு கத்தி கூக்குரல் இட்டு நிலை குலைந்து போனோம்.

என்னை வன்புணர்ச்சி செய்தவர்களிடம் நான் இதைப்பற்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று மனப்பூர்வமாக சத்தியம் செய்திருந்தேன். ஆனால் நான் வீட்டுக்கு சென்றவுடனேயே, என் அப்பாவை போலீஸ்-க்கு ஃபோன் செய்ய சொன்னேன். என் அப்பாவும் என்னைப் போலவே அவர்களை கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் பதற்றமாக இருந்தார். நான் அனுபவித்த சித்ரவதையை யாரும் அனுபவிக்காமல் இருக்க வேண்டி எதையும் நான் செய்ய தயாராய் இருந்தேன்.

போலீஸார் என் உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், அலட்சியமாகவும், என்னவோ நான்தான் குற்றம் செய்ததது போல் என்னைப்பார்த்தனர். அவர்கள் என்னிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, நான் நேரடியாகவே எல்லாவற்றையும் சொன்னேன். நான் வெட்கப்படாமல், கூச்சப்படாமல் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயம் எல்லோருக்கும் பகிங்கரமாக வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் சொன்ன போது, நான் பரவாயில்லை என்று சொன்னேன். நானோ அல்லது ரஷீதோ குற்றம் சொல்லப்படுவோம் என்று எனக்கு உண்மையாகவே அப்போது தோன்றவில்லை. என் ‘பாதுகாப்புக்காக’ நான் இளங்குற்றவாளிகளுக்கான இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறிய போது, என்னிடம் வன்புணர்ச்சி கொண்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டி, காமுகர்களுக்கும், வன்புணர்ச்சி கொள்ளும் ஆட்களுக்கும் நடுவில் வாழ நான் தயாராய் இருந்தேன். 


பெண்களுக்கான நீதி, நமது சட்ட நெறிமுறைகளில் எளிதில் கிடைக்காது என்பதை விரைவில் உணர்ந்து கொண்டேன். நாங்கள் மலையில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அவர்கள் கேட்ட போது, நான் கடுஞ்சினம் கொண்டேன். அவர்கள் ரஷீதிடம் ஏன் அவன் ஒன்றும் செய்யவில்லை என்று கேட்டபோது, நான் கத்தினேன். அவன் எதிர்த்திருந்தால், அவர்கள் என்னை மேலும் துன்புறுத்தியிருப்பார்கள் என்று கூட அவர்களுக்கு புரியவில்லையா என்ன? நான் என்ன வகை உடை அணிந்திருந்தேன், ஏன் ரஷீதின் உடம்பில் தெரியுமாறு எந்த காயமும் இல்லை (அரிவாளின் கைப்பிடியால் தொடர்ந்து குத்தப்பட்டதால், அவனுடைய வயிற்றின் உட்பகுதியில் இரத்தபோக்கு ஏற்பட்டு இருந்தது) என்றெல்லாம் அவர்கள் கேட்டபோது, நான் சோகத்திலும், பயத்திலும் சுக்குநூறாக உடைந்து போனேன். என் அப்பா போலீஸார் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தார் என்று சொல்லிவிட்டு அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த அளவுக்குத்தான் போலீஸ் எனக்கு ஆதரவு அளித்தது. எந்த ஒரு குற்ற புகாரும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. நாங்கள் கொஞ்ச தூரம் நடந்து சென்றதாகவும், திரும்பி வர ‘தாமதமாகி’ விட்டதாகவும் அறிக்கை பதிவு செய்து கொண்டார்கள்.

இப்போது இந்த நிகழ்வு நடந்து, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் நடந்த விஷயங்களை நினைத்து துன்பப்படாமல் நான் ஒரு நாளும் இருந்ததில்லை. பாதுகாப்பின்மை, பலவீனம், பயம், கோபம், உதவியில்லா உணர்வு ஆகியவற்றோடு நான் தொடர்ந்து இப்போதும் போராடிக்கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் போது, எனக்கு பின்னால் வரும் காலடிச்சத்ததை நான் கேட்கையில் எனக்கு வியர்க்க தொடங்கிவிடுகிறது, நான் கத்தாமல் இருக்க வேண்டி, என் உதடுகளை நானே கடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு அன்பான தொடுதலை கூட ஏற்றுக்கொள்ளாமல் 'வேண்டாம்' என்கிறேன். என்னால் கழுத்தில் ஓர் இறுக்கமான சால்வையை கூட பொறுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் அது என் கழுத்தை நெறிக்கும் கைகள் போல் எனக்கு தோன்றுகிறது. ஆண்களின் கண்களில் வரும் ஒரு 'அப்படியொரு' குறிப்பிட்ட பார்வையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது- அடிக்கடி அந்த பார்வை அவர்களது கண்ணில் வந்து போவதை நான் பார்த்திருக்கிறேன்.
 
எனினும் பல விதங்களில், இப்போது நான் ஒரு வலிமையானவளாக ஆகியிருக்கிறேன். முன்பெப்போதும் இல்லாத வகையில் என் வாழ்க்கையை நான் மெச்சுகிறேன். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரிசே. நான் என் வாழ்க்கைக்காக போராடினேன், வெற்றியும் பெற்று விட்டேன். இது ஒரு நல்ல விஷயமே என்று நான் உணர்வதை யாருடைய எந்த ஒரு எதிர்மறை செயல்பாடுகளும் தடுக்க முடியாது.

நான் ஆண்களை வெறுப்பதில்லை. அவ்வாறு செய்வது மிக எளிது, ஆனால் பல ஆண்கள் வேவ்வேறு விதமான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர், “ஆண்கள் பெண்களை விட மேலானவர்கள்”, “பெண்களுக்கு இல்லாத உரிமைகள் ஆண்களுக்கு இருக்கின்றன”, “ஆண்கள் பெண்களை ஆளப்பிறந்தவர்கள்” என்ற விசித்தரமான பொய்களையும், ஆணாதிக்கத்தையுமே நான் வெறுக்கிறேன்.

நான் வன்புணர்ச்சிக்கு ஆளான காரணத்தால் தான் நான் பெண்களின் பிரச்சனைகள் பற்றி அக்கறை கொண்டிருக்கிறேன் என என் பெண்ணியவாத நண்பர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியொன்றும் இல்லை. நான் பெண்ணியவாதியாக இருப்பதற்கு இருக்கும் பல காரணங்களில் 'வன்புணர்ச்சி' என்பது ஒரே ஒரு காரணமே. ஏன் வன்புணர்ச்சியை மட்டும் பிரித்து பார்க்கிறீர்கள்? பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை கட்டாயப்படுத்தி திணிப்பதை மட்டும் வன்புணர்ச்சி என்று ஏன் கருத வேண்டும்? ஒவ்வொரு நாளும், தெருவில் நடந்து செல்லும்போது வரும் காமப்பார்வைகளில் நாம் வன்புணர்ச்சிக்கு ஆளாவதில்லையா? நாம் காமப்பொருளாக நடத்தப்படும் போதும், நமது உரிமைகள் மறுக்கப்படும் போதும், பல வகைகளில் ஒடுக்கப்படும் போதும் நாம் வன்புணர்ச்சிக்கு ஆளாவதில்லையா?

ஒரே ஒரு பரிமாணத்தில் மட்டும் பெண்கள் ஒடுக்கப்படுவதை பகுத்தாராய்ந்து விட முடியாது. எடுத்துக்காட்டாக, சமூக வர்க்க பகுத்தாய்வு என்பது முக்கியமானது, ஒருவரின் சமூக வர்க்கத்திற்குள்ளேயே அதிகமான வன்புணர்ச்சி சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என்பதை இன்னும் விவரிக்க முடியவில்லை.

பெண்கள் பல்வேறு விதங்களில் ஒடுக்கப்படும் நிலை தொடரும் வரை, எல்லா பெண்களும் வன்புணர்ச்சிக்கு ஆளாகக்கூடிய சூழ்நிலை தொடந்து இருந்து கொண்டேதான் இருக்கும். நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளும், இவற்றின் பல்வேறு வடிவங்களும் நீக்கமற நிறைந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்களை இரகசியமாக மூடி மறைப்பதை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவற்றை எப்படி உண்மையில் பார்க்கப்பட வேண்டுமோ, அப்படி அவற்றை நாம் பார்க்க வேண்டும் – வன்புணர்ச்சி என்பது ஒரு வன்முறை குற்றம், அதில் ஈடுபடுபவன் குற்றம் செய்பவன். 

நான் உயிருடன் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வார்த்தையில் சொல்லமுடியாத அளவுக்கு வன்புணர்ச்சிக்கு ஆளாதல் என்பது கொடூரமானது, இருந்தாலும் உயிருடன் இருப்பது என்பது மிக முக்கியமானது. இந்த உணர்வுகளை உணரக்கூட ஒரு பெண்ணுக்கு உரிமை மறுக்கப்படுகிறது எனில், நமது விழுமியங்களில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது இல்லையா?
ஒருவர் துன்புறுத்தப்படும் போது, உயிருடன் இருக்க வேண்டி அவர் அடிகளை பொறுத்துக்கொள்கிறார் என்று கொண்டால், அவர் அடிகளை விருப்பத்தோடுதானே ஏற்றுக்கொள்கிறாள் என்று யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் போது மட்டும், ஏன் அவர்களை அவள் எதிர்க்காமல் விட்டாள், ஏன் அவர்களை அவள் அவ்வாறு செய்ய விட்டாள், அவள் என்ன அதனை சந்தோஷமாக அனுபவித்தாளா என்றெல்லாம் பெண்களிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட வகை பெண்கள் மட்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாவதில்லை, அதே போல் ஒரு குறிப்பிட்ட வகை ஆண்கள் மட்டும் வன்புணர்ச்சி கொள்வதில்லை. வன்புணர்ச்சி கொள்பவன் ஒரு கொடூரமான பைத்தியக்காரனாகவும் இருக்கலாம், அடுத்த வீட்டு பையனாகவும் இருக்கலாம், ஒரு நட்பான சொந்தக்காரராகவும் இருக்கலாம். வன்புணர்ச்சி என்பது ‘மற்ற’ பெண்களின் பிரச்சனை என்று நினைப்பதை விட்டொழிப்போம். அதன் வடிவங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதை ஒப்புக்கொண்டு, அது பற்றிய ஒரு சரியான புரிதலுக்கு வருவோம்.

ஆதிக்க உறவுகளின் அடிப்படை இந்த உலகில் மாறும் வரை, ஆண்களின் உடைமையாக பெண்கள் பார்க்கப்படுவது நிறுத்தப்படும் வரை, நாம் எப்போதுமே இவ்வாறான வன்முறை நிகழ்வுகள் எந்த நேரத்திலேயும் நடக்கலாம் என்ற பயத்துடனேயே வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்.

நான் போராடி உயிர்பிழைத்தவள், வெற்றிக்கொண்டவள். என்னை வன்புணர்ச்சி செய்யுமாறு நான் ஒன்றும் கேட்கவில்லை. அதை நான் சந்தோஷமாக அனுபவிக்கவுமில்லை. எனக்கு தெரிந்த சித்ரவதைகளிலேயே மிக மிக கொடுமையானது எனக்கு நடந்த அந்த நிகழ்வுதான். வன்புணர்ச்சிக்கு ஆளாவது என்பது எப்போதுமே பெண்ணின் தவறாக இருக்க முடியாது.

இந்த கட்டுரையை வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களின் அமைதியை உடைக்கும் வகையில் எழுதியுள்ளேன். நாமெல்லாம் இவ்வாறான நிகழ்வுகளால் பாதிக்கப்படவே போவதில்லை என்று நம்மை நாமே சப்பைக்கட்டு கட்டி சமாதானபடுத்திக்கொள்வதை சாடவும், இது போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவர்களை தாங்கவே முடியாத தனிமையில் தள்ள வசதியாக சொல்லப்படும் தவறான கருத்துக்களை தகர்க்கவும் எனது பங்களிப்பாக இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

(9 ஜனவரி 2013-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் திருமதி. சொஹைலா அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை விரைவில் மொழிபெயர்த்து அளிக்கிறேன்.)

-கார்த்திக் லெக்ஷ்மணன், உளவியல் ஆலோசகர்
www.counselingchennai.com

1 comment:

  1. Sohaila has portrayed the mental agony of the sexually harassed and how they should react to the situations and live the precious life against all trauma.

    ReplyDelete