Sunday, January 15, 2012

நான் என் ஊருக்கே போகப் போறேன், விரைவில்!


நான் சென்னைக்கு படிக்க, பிழைக்க வந்தவன். நான் நினைத்த படிப்பை படிக்க, அதிக சம்பளத்தில் வேலை பார்க்க சென்னை வந்தவன். இதில் நான் பெற்றதை விட, இழந்ததே மிக அதிகம்.

உளவியல் பிரச்சனைகள் இங்கு தான் அதிகம் உண்டு. உளவியல் ஆலோசகனாய் எனக்கு இங்கு தான் வேலை அதிகம், என் சொந்த ஊருக்கு சென்றால் என் பருப்பு வேகாது என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அது தவறு என்று சென்ற வாரம் மதுரை சென்ற போது நான் புரிந்துகொண்டேன். அங்கு அடையாறு புற்று நோய் மருத்துவமனை சார்பாக ஒரு உளவியல் பயிற்சி அளிப்பதற்காக சென்றிருந்தோம்.

அங்கு கை தேர்ந்த உளவியலாளர்கள் இல்லை என்பதாலா எங்களை அழைத்திருந்தார்களோ என்னவோ! நாங்கள் பேசுவதை மிகவும் இரசித்த அவர்கள் பல விஷயங்களை எளிதில் புரிய வைத்ததாக கூறினார்கள்.

மனிதர்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் மனப்பிரச்சனைகள் உண்டு என்ற உண்மையை மறந்தே போயிருந்தேன். உளவியல் பிரச்சனைகள் அங்கும் உண்டு. அங்கும் நான் பல விஷயங்களை செய்ய முடியும்.

எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திடுவீர் என்றார் பாரதியார்.

கலை செல்வத்தை பெறவே நான் இங்கு வந்தேன். என்னை இந்த நிலைக்கு வளர்ந்து வர, என்னை வளர்த்து விட்ட ஊரை மறந்து விட்டேனே!

 “எல்லா சன்னல்களையும் திறந்து விடுங்கள்; தென்றல் எட்டு திசைகளிலிருந்தும் வீசட்டும். தென்றல் புயலாய் உங்களை தள்ளிக் கொண்டு சென்று விடாமல் இருக்க, உங்கள் கால்கள் நிலத்தில் இறுக பற்றி இருக்கட்டும் என்றார் மகாத்மா காந்தி.

என் படிப்பை முடித்தவுடன் சென்னையில் என் வேலை முடிந்து விடும். எதற்காக நான் இங்கு வந்தேனோ, அந்த வேலையை முடித்த பின், என் ஊருக்கு திரும்புவது தானே நியாயம். அதை விடுத்து நான் இங்கேயே இருந்தால், யாரோ ஒருவரின் வாய்ப்பை தட்டி பறிப்பதாக தானே அர்த்தம்.

சென்னை ஒரு போட்டி உலகம். ஆரோக்கியமான போட்டி இங்கு என்னைப் பொருத்தவரை மிகவும் குறைவு. முடிவில் ஏற்படுவதோ பொறாமை தான். இந்த பொறாமை உலகத்தில் நிலைத்து நிற்க தினம் தினம் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லையெனில் என் இடம் மற்றவருக்கு தாரை வார்க்கப்படும். இது தான் சென்னையின் இயல்பு. மக்கள் தொகை அதிகரித்தால் வேறு என்ன நடக்க முடியும். என்னைப் போல் பலரும் முன்னேற தினம் தினம் இங்கு போராடுகிறார்கள். இந்த போராட்டத்தால் அதிகம் ஏற்படுவது முன்னேற்றம் அல்ல, மன உளைச்சல் தான்.

இங்கிருந்து வெளிநாடு சென்றவர்கள் அங்கிருக்கும் பிரச்சனைகளால் இந்தியாவுக்கே திரும்பி வருகிறார்கள். வெளி நாட்டினரின் வேலை வாய்ப்பை இந்தியர்கள் தட்டிப்பறிப்பதால் தான் ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் நாம் எதிரியாக பார்க்கப்படுகிறோம். யாருக்கு தெரியும், மும்பை, தெலுங்கானா போல் சென்னையிலும் வெளியூர்க்காரர்கள் இருக்கக் கூடாது என எதிர்காலத்தில் யாராவது அரசியல் செய்யலாம்.

இந்தியா முன்னேறாமல் இருக்க ஊழல் உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பினும், நம் வெளிநாட்டு, வெளியூர் மோகமும் ஒரு முக்கிய காரணம் என்றே நான் நினைக்கிறேன். சொந்த ஊரின் வளங்களை பயன்படுத்தி முன்னேறி விட்டு, நம் சொந்த ஊர் பின் தங்கி இருக்க விட்டு விட்டு, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும், நம் உழைப்பை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?


3 comments:

  1. என் விகடனில் உங்கள் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது , வாழ்த்துக்கள் !!!
    உங்கள் பதிவு சிந்திக்க தூண்டுவதாயிருக்கிறது .
    ஏற்கனவே சென்னையில் , வேற்று மாநிலத்தவருக்கு எதிரான மனநிலை பரவிக்கிடக்கிறது , விரைவில் அது மற்ற ஊர் காரர்களின் மேல் திரும்பினாலும் ஆச்சர்யமில்லை

    இவண்
    இணையத் தமிழன் "விஜய்"
    http://inaya-tamilan.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. Thank you. Sorry, only now, I could see your message. Yes, you are right.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete