Tuesday, May 24, 2011

வெளியில் தெரிய வரும் திருமண முறிவுகளும், நடைமுறைக்கு ஒத்து வரும் தீர்வுகளும்!

நமது இன்றைய வாழ்க்கை முறை கிழக்கத்திய பண்பாடும், மேற்கத்திய பண்பாடும் கலந்த வாழ்க்கை முறை. நாம் சில நேரங்களில் மேற்கத்தியர்களாகவும், மேலும் சில நேரங்களில் தமிழர்களாகவும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக பணி செய்யும் இடங்களிலும், கல்வி பயிலும் இடங்களிலும், நண்பர்களுடன் பொழுது போக்கும் நேரங்களிலும் மேற்கத்தியர்களையே மிஞ்சும் வகையில் மேற்கத்தியமாய் நடந்து கொள்கிறோம். நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறோம், சிறு கோப்பையில் மது அருந்துகிறோம், பிட்சா பர்கர் சாப்பிடுகிறோம். கணிணி கைபேசி என மேற்கத்திய கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகிறோம், ஃபேஸ் புக் டிவிட்டர் என அளவளாவுகிறோம், காதலர் தினம் கொண்டாடி மகிழ்கிறோம்.

பொங்கல் வந்தால் 'நான் தாண்டா தமிழன்' என்பது போல் வேட்டி கட்டிக்கொண்டு, கரும்பு கடித்து கொண்டாடுகிறோம். திருமணம், காது குத்து, சடங்கு, திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒரு நாள் முன்னரே போய் அரட்டை அடிக்கிறோம். காரைக்குடி, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி என ஊர் பெயர்களைக் கொண்ட உணவகங்களுக்கு சென்று நம் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழ்கிறோம். அவ்வபோது கோயிலுக்கு சென்று பயபக்தியாய் சாமி கும்பிடுகிறோம்.

இவ்வாறு நம் வாழ்க்கையின் பல நிகழ்வுகளை மேற்கத்தியம், தமிழ் என பிரித்துக்கொண்டே செல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் முழுவதுமாக மேற்கத்தியனாய் மாறி விடவும் முடியாது. அதே நேரத்தில் தமிழ் பண்பாட்டையே நான் பின்பற்றுவேன் என்றும் விடாப்பிடியாய் இருக்க முடியாது. உண்மை என்னவெனில் நாம் அனைவரும் இரு அடையாளங்கள் கொண்டவர்கள்- தமிழன் மற்றும் மேற்கத்தியன். இந்த இரு அடையாளங்கள் நம்மை பல்வேறு விதமான புதிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கிறது. 'திருமண முறிவு' என்பது அவற்றில் ஒன்று.

சமீப காலமாக அதிகமாய் திருமணங்கள் முறிவை சென்றடைவதாக பலர் கூறுகின்றனர்.(குடும்பத்திற்கு களங்கம் வராமல் இருக்க வெளியில் தெரியாத பல திருமண முறிவுகள் வீட்டுக்குள்ளேயே அரங்கேறிதை அவர்கள் அறியாதவர்கள் போலும்) பெண்கள் அதிகமாய் படிப்பது, அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் தகுதியைப் பெற்றது, இளவயது மோகத்தால் காதல் வயப்படுவது எனப் பற்பல காரணங்களை அவர்கள் அடுக்குகிறார்கள். இப்பிரச்சனையை தீர்க்க அவர்கள் கொடுக்கும் தீர்வு, மேற்கத்திய பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ் பண்பாட்டை மட்டும் பின்பற்றி வாழச்சொல்வது. இத்தீர்வு நிச்சயம் நடைமுறை வாழ்விக்கு ஒத்துவராது. நம்மால் கை பேசி, இணையம், ஆங்கிலம் இல்லாமல் வாழ முடியாது. அன்று பிரிட்டிஷ் நம்மை ஆண்டது. இன்று அவன் விட்டுப்போன ஆங்கிலமும் கிரிக்கெட்டும் நம்மை ஆள்கிறது.

பண்பாடு என்பது நாளுக்கு நாள் மாறுவது, வேறொரு வகையில் சொன்னால் அவசியம் மாற வேண்டியது.இன்று மேற்கத்திய கலாச்சாரம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக மாறி, நம் பண்பாட்டில் புதியதோர் பரிணாமத்தை செதுக்கி சென்றிருக்கிறது. மேற்கத்திய பண்பாட்டின் கல்வி, தொழில் நுட்பங்கள், இணையம் போன்ற நேர்மறை விஷயங்களும், திருமண முறிவு, மது, சுய நல வாழ்க்கை போன்ற எதிர்மறை விஷயங்களும் நம் வாழ்க்கை முறையில் கலந்துவிட்டன. நல்ல விஷயங்களை மட்டுமே மேற்கத்தியத்திடமிருந்து எடுத்துக்ககொள்வோம், கெட்ட விஷயங்களை தூக்கிப்போட்டு விடுவோம் என நமது பண்பாடு இரு வேறு பார்வை பார்ப்பதில்லை. அது ஒரு வெள்ளந்தி,அதற்கு இந்த வேறுபாடெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி! திருமண முறிவுகளை தடுக்க நீர் கொடுக்கும் தீர்வு என்ன என்று கேட்கிறீர்களா! இதோ சொல்கிறேன். அத்தீர்வு மேற்கத்திய பண்பாட்டிலிருந்தே வருகிறது. அது தான் 'திருமணத்திற்கு தயார்படுத்திக்கொள்ள தரப்படும் உளவியல் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்'! திருமணத்திற்கு முன்பே பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு, சில முக்கிய முடிவுகளை எடுக்கவும், ஒருவரை ஒருவர் புரிந்து விட்டுக்கொடுத்து வாழவும் மேற்கத்திய பண்பாடு உளவியல் ஆலோசகரை சந்திக்க சொல்கிறது. மண முறிவு ஏற்படும் வரை காத்திருந்து, சட்டமே உளவியல் ஆலோசனை பெறுமாறு வற்புறுத்துவதை காட்டிலும் இது எவ்வளவோ மேல்.

உளவியல் ஆலோசனை என்பது பிரச்சனைகளுடன் பொருத்திப்பார்க்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது. உளவியல் ஆலோசனையை மகிழ்ச்சியுடனும், வாழ்க்கை முன்னேற்றத்துடம் பொருத்திப்பாருங்களேன்! அப்படி செய்தீர்களேயானால், அது உளவியல் ஆலோசகர்களான எங்களுக்கும் மகிழ்ச்சியை அள்ளித்தரும்!

1 comment: