Sunday, May 8, 2011

என் அண்ணனின் இறப்புக்கு நாங்களும் காரணம்!


என் அண்ணனின் இறப்புக்கு நாங்களும் காரணம்!

இதைக் கூற எனக்கு குற்ற உணர்வோ, கூச்சமோ இல்லை.ஓர் உளவியலாளனாய், உண்மையைக் கூற எனக்கு தைரியம் உண்டு. நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை தெரிய வைத்துவிட்டு இறந்து போனான்.

இறந்தவர்களின் கெட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது அநாகரிகம் என்று கருதபட்டாலும், அவனின் வாழ்க்கையும், எங்களின் தவறுகளும் பலருக்கு பாடமாய் அமையவே நான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

இங்கு 'நாங்கள்' எனக் குறிப்பிடுவது, என்னை, என் தந்தையை, என் தாயை மற்றும் சொந்த பந்தங்களை. எங்களைத் தவிர பிறர் பலரும் அவனின் இறப்பிற்கு காரணமாய் இருந்திருக்கலாம். அவை டாஸ்மாக் மதுபானக் கடையை வைத்து கல்லாக்கட்டும் அரசியல் வியாதிகள், அவனுக்கு ஆசிரியராய் இருந்தவர்கள், அவனுக்கு ஊத்திக் (கெ/கொ)டுத்த நண்பர்கள், அவன் ஒரு தலைக்காதல் செய்த பெண்கள், எனக்கு தெரிய வந்திராத மேலும் பலர், மிக முக்கியமாக இவர்கள் அனைவரையும் தன் வாழ்க்கைக்குள் விட்ட என் அருமை அண்ணன். எனினும் என்னைப்பற்றியும், என் குடும்பத்தை பற்றி மட்டுமே பேச எனக்கு உரிமையுள்ளதாய் கருதுகிறேன்.

வளர்ச்சி உளவியல்(Developmental Psychology) படி, ஒரு குழந்தை ஏறத்தாழ 50% தன் மரபணுக்களின் மூலம் தன் பண்புகளை பெறுகிறது. மீதி 50% தான் பெற்றோர்களும், மற்றவர்களும் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது. என் தந்தையை உற்று நோக்கியதிலிருந்து, எனது தந்தைக்கும், அவர்கள் முன்னோருக்கும் மனச்சோர்வு (Depression), நடக்கும் விஷயங்களை தவறாக புரிந்து கொள்ளுதல் (Delusional Disorder) போன்ற சில உளவியல் பிரச்சனைகள் இருந்திருக்க வேண்டுமென நான் கருதுகிறேன்.அவை மரபணுக்கள் மூலமாக என் அண்ணனுக்கு வந்திருக்கலாம்.

அவன் பிறந்தது முதல் பதின் பருவம் (Adolescence) அடையும் வரை அதிகம் சார்ந்திருந்தது எங்கள் குடும்ப சொந்த பந்தங்களை. பதின் பருவம் வரை அவன் கண்ட கொடுமைகள் பற்பல. எங்கள் தாய்க்கும் தந்தைக்கும் தினமும் நடக்கும் சண்டைகளில் பார்த்து வளந்த அவன், வாழ்க்கை மீது சிறு வயதிலேயே நம்பிக்கை இழந்திருக்க வேண்டும். எங்கள் தந்தைக்கோ அவனை சற்றும் பிடிக்காது. அவன் பாலுக்காக அழுதால், "சனியன் அழுது, எதையாவது செய்து அது வாயை அடக்கு!" என்பாராம். எங்கள் தாயோ, செய்வதறியாமல் தன்னால் முடிந்த வரை போராடிப்பார்த்ததில் அவனை என் சொந்தக்காரர்கள் வீட்டில் விடத்தான் முடிந்தது.  பல்வேறு காரணங்களாலும், அவன் செய்த அகோர சேட்டைகளினாலும் யாராலும் அவனை தொடர்ந்து வைத்துக்கொள்ள முடியாமல் போனது. ஆகவே அடுத்த நாள் தான் யார் வீட்டில் இருப்பேன் என்று அவனுக்கே தெரியாது.

ஒரு முறை அவன் தனது இரண்டு வயதில் எங்களது ஆயா (எங்கள் செட்டிநாட்டில் அம்மாவின் அம்மாவை ஆயா என்று தான் சொல்லுவோம்) வீட்டில் இருக்கும் போது, ரோட்டில் இறங்கி அங்கு செல்லும் பேருந்து ஒன்றினை வழி மறித்திருக்கிறான். பின்னாலேயே ஒடி வந்து, அவனை தூக்கிக்கொண்ட எங்களது ஆயாவைப்பார்த்து ஒட்டுநர் கேட்டார் "இந்த வயசான காலத்துல இப்படிப்பட்ட புள்ள ஒனக்குத் தேவையாமா?"

அவன் பட்ட கஷ்டங்களை பின்வரும் இரு சம்பவங்களை வைத்து மதிப்பிடலாம்.
1. ஒரு முறை எங்கள் அம்மாவிடம் வெறுத்துப்போய் அவன் கேட்டானாம் "ஏம்மா, நம்ம அப்பா ஏன் இப்பிடி இருக்காரு? நம்ம அப்பாவுக்கு பதிலா சித்தப்பாவை அப்பாவா ஆக்கிடலாமா?" அவனை அரவணைத்த சிலரில் என் சித்தப்பாவும் ஒருவர்.
2. சம்மந்தமில்லாமல் ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்று கல்யாண விருந்து சாப்பிட்டு வந்து, வீட்டில் சாப்பிட சொன்ன அம்மாவிடம் உண்மையை கூறியிருக்கிறான். நான் நினைக்கிறேன், இதற்கு காரணம் வீட்டில் அவனுக்கு பிடித்த உணவுகள் செய்யப்படாமல் இருந்திருக்க வேண்டும் மேலும் அவன் எந்த வகையான விருந்துக்கோ, ஓட்டல்களுக்கோ அழைத்து செல்லப்பட்டிராமல் இருந்திருக்கவேண்டும்.

அவன் பிறந்து 7 வருடங்களுக்கு பிறகு பிறந்த என்னை எங்கள் அப்பா என் அண்ணனைப் போல் அல்லாது,கண்ணும் கருத்துமாய் பார்த்து கொண்டார்.  ஒரு வழியாய் நான் எல் கே ஜி படித்த போது, நானும் அவனும் ஒன்றாய் எங்கள் வீட்டில் இருக்க ஆரம்பித்தாய் ஞாபகம்.

இவ்வாறு பல கஷ்டங்களை பொறுத்துக்கொண்ட அவன் என்னை அவனுக்கு போட்டியாய் வந்ததாக கருத ஆரம்பித்து, நான் 1ம் வகுப்பு செல்லும் காலம் முதல் என்னை திட்டவும் அடிக்கவும் தொடங்கினான்.அதற்கு முன்பு வரை என் மீது பரிவும் பாசமும் கொண்டிருந்ததாகவே என் நினைவு. என்னை தனியாக வீட்டில் விட்டு போக மாட்டான், சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து, விழாமல் இருக்க கட்டி பிடிக்க சொல்லி ஊர் சுற்றி காண்பித்தான். நான் எங்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது, அவனைப்போல கருப்பாக அல்லாது நான் சிகப்பாக பிறக்க வேண்டுமென ரோஜாப்பூ வாங்கி அதன் இதழ்களை எங்கள் தாய்க்கு சாப்பிட கொடுத்திருக்கிறான். ( நான் அப்படியிருந்தும் கருப்பாய் தான் பிறந்தேன் என்பது வேறு விஷயம்)

அவன் எங்களை எதிரியாய் பார்த்தான் என்று சொல்வது தவறு. எங்கள் முந்தைய நடத்தைகள் அவனை எதிரியாய் பார்க்க வைத்தன. 

தந்தை தனக்கு எதிரானவர், தாயோ தந்தை பேச்சை மீற முடியாத, அவருடன் போராடி ஜெயிக்க முடியாத வெற்றுத்தாய். தம்பியோ தனக்கு போட்டியாய் வந்தவன் (நானும் அவனை புரிந்து கொள்ளாமல் எதிரியாய் வெகுகாலத்திற்கு நினைத்துக்கொண்டிருந்தேன்) என்று அவனின் ஆழ்மனதில் ஊறிவிட்ட செய்தியால் எங்களின் காலம் கடந்த முயற்சிகள் கடலில் கொட்டிய பால் போல் ஒன்றுக்கும் உதவாமல் போனது.

பலரும் கேட்கிறார்கள், ஓர் உளவியலாளன் வீட்டில் இருந்தும் அவனை காப்பாற்ற முடியவில்லையா என்று.

நான் ஒன்றும் பேண்ட், சர்ட், ஷு அணிந்து, குஷன் சேரில் அமர்ந்து உளவியலானாய் அவனுக்கு அறிமுகமாகவில்லை. உடலில் ஒன்றும் அணியாத நிர்வாணக்குழந்தையாய், தம்பியாய் தான் அவன் என்னை முதன் முதலில் பார்த்தான். அதுவே கடைசி வரை அவன் என்னை பார்த்த பார்வையும் கூட. 

என் உளவியல் ஆலோசனை பெற வரும் சிலர் சொல்வதுண்டு "நீங்கள் இவ்வளவு வயது குறைந்தவராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை". சொன்னவர் அடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வரமாட்டார் என மனதில் நினைத்துக்கொள்வேன். அப்படி சொன்ன ஒருவரைத் தவிர மற்றவர்கள் என்னை திரும்ப சந்தித்ததேயில்லை.

அவனின் போக்கைக்க் கண்டு, தான் செய்த தவறுகளை எண்ணி எங்கள் தந்தையும் தாயும் வருத்தப்பட்டார்கள். அவனுக்கு கொடுக்கமுடியாமல் போன சுதந்திரத்தை என் பதின் பருவத்தின் போது எனக்கு கொடுத்தார்கள். நான் இன்று உளவியலாளனாய் இவ்வளவு தூரம் வர ஒரு முக்கியமான காரணம் அவன் என் தந்தைக்கும் தாய்க்கும் தன் வாழ்வை அர்ப்பணித்து கற்றுக்கொடுத்த பாடம். அதற்காக நான் என்றென்றைக்கும் அவனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

மீண்டும் வளர்ச்சி உளவியல் என்ன சொல்கிறது என்று பார்த்தால், பதின் பருவம் முன்பு இருப்பதே 'குழந்தைப் பருவம்'. குழந்தைப்பருவ அனுபவங்களே ஒருவரின் சுய மதீப்பிட்டை (Self-esteem) நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை பருவத்தில் பாதுகாப்பு உணர்வை (Sense of Security) பெறாதவர்கள் , பிற்கால வாழ்க்கையில் அதைப் பெறுவது மிகவும் கடினம்.

இவ்வாறு அவன் பாதுகாப்பு உணர்வையும் சுய மதீப்பீட்டையும் மிகக்குறைவாகவே பெற்றதால், பதின் பருவத்தில் அவனுக்கு ஆதரவு அளித்தது அவனின் நண்பர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த குடியும். குடிக்கும் போது கூட அவன் சந்தோஷமாக இருந்ததில்லை என்று அவன் பல முறை என்னிடம் கூறியிருக்கிறான். தன் தாழ்வு மனப்பான்மையை மறக்க, மறைக்க அவன் குடித்த குடி, அவனையே குடித்துவிட்டது.

எனவே நான் உறுதியாய் சொல்கிறேன், அவனது வாழ்வின் அடிப்படையை மரபணுவின் மூலமும், வளர்ப்பின் மூலமும் பிரச்சனைக்குரியதாக்கி பிற்காலத்தில் அவன் தன்னையே பலி கொடுக்க காரணமாய் இருந்தவர்கள் நாங்களும் தான்!

No comments:

Post a Comment